Vikadan website live linkhttp://m.vikatan.com/tiny/index.php?module=cinema&aid=8196

என்னைப் பார்த்து, சன்னிலியோன் அட்ரஸ் கிடைக்குமானு கேட்டுட்டானே! -அரற்றும் அட்ரஸ் கார்த்தி!
Ratings :0
ண்ணே நயன்தாரா அட்ரஸ் கிடக்குமாண்ணே..?’’ என கலாய்க்க வந்தவரிடம், கொஞ்சமும் கோபம் காட்டாமல், 
 
‘‘தம்பி யாருப்பா நீ.. எந்த ஊரு… உன் அட்ரஸ் என்ன?’’ என கேட்டு ஒரு டைரியில் அழகாய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த அந்த நபரை, ஒரு மத்தியான வேளையில் டீக்கடை வாசலில் பார்த்ததும், ஹலோ சொல்லி அறிமுகம் ஆனேன்.
 
 
’’மெட்ராஸ் கார்த்தியை தெரியும் …இந்த அட்ரஸ் கார்த்தியை  தெரியுமாங்க?!…சினிமாவுக்கு புதுசா வர்றவங்களுக்கு,  அட்ரஸ் கார்த்தினா யாருன்னு ஓரளவுகாச்சும் தெரியும்ங்க. தெரியாட்டியும் பரவாயில்லீங்க நீங்களாவது தெரியப்படுத்துங்க’’ என்று வேண்டுகோள் வைத்தார்  அட்ரஸ் கார்த்தி. 
இந்த செல்போன் யுகத்துலயும் இப்படி தோள்ல ஒரு பேக் மாட்டிக்கிட்டு கையில டைரியோட அலையுறீங்களே யாருங்க பாஸ் நீங்க?
 
சினிமாதான் வாழ்க்கைனு ஊரைவிட்டு ஓடி வந்த ஆயிரமாயிரம் குடிமக்கள்ல நானும் ஒருத்தணுங்க. வந்தவுடனே சினிமா வாய்ப்பு கிடைக்காம ஒரு ஹோட்டல்ல சூப்பர் வைசரா வேலை பாத்தேன். அதுக்கப்புறம் அலைஞ்சு திரிஞ்சு வேட்டைக்காரன், ஆரோகணம்னு 50க்கும் அதிகமான படங்கள்ல துணை நடிகரா நடிச்சிருக்கேன். 10 ஷார்ட் ஃபிலிம்லயும் நடிச்சிருக்கேன்.சின்னத்திரை நடிகர் சங்கத்துலயும் உறுப்பினரா இருக்கேன். ஆனா, அப்பவெல்லாம் நான் யாருனு கண்டுபிடிக்காத மக்களுக்கு, இனிமேதான் நான் யாருனு தெரிய போகுது பாருங்க.
 
ஆரம்பத்துல சினிமா சான்ஸுக்காக அலைஞ்சப்ப, யாருகிட்ட போய் அட்ரஸ் கேக்கனும்னுகூட தெரியாது. ஒரு புரடக்‌ஷன் கம்பெனியை போயி பாருனு சொல்வாங்க. ஆனா, அந்த கம்பனியோட முழு அட்ரஸ் என்னனு கேட்டா அவங்களுக்கு சொல்லத் தெரியாது. என்னை மாதிரி புதுசா வரவங்களுக்கு புரடக்‌ஷன் கம்பெனி, டைரக்டர் ஆபீஸ், ஒளிப்பதிவாளர்கள். துணை நடிகர்கள், பெரிய நடிகர்கள் அட்ரஸ்னு எல்லாத்தையும் தேடித்தேடி குறிச்சு வெச்சுக்கிட்டு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். ஷூட்டிங் டைம்ல சும்மா இருக்க
மாட்டேன். மெதுவா போய் யூனிட்ல இருக்குறவங்ககிட்ட பேச்சு கொடுப்பேன். அவங்களுக்கு தெரிஞ்ச விலாசத்தை சொல்வாங்க. அதேபோல நான் போகுற இடமெல்லாம் எல்லார்கிட்டயும் பழகி அவங்களோட தெளிவான முகவரியையும் போன் நம்பரையும் குறிச்சு வெச்சுக்குவேன். என்னோட போட்டோஸ் கலெக்‌ஷனை ஆல்பமா போட்டு வெச்சு வாய்ப்பு கேக்குறதுக்கு இந்த அட்ரஸெல்லாம் எனக்கு அவ்ளோ உதவுச்சு. 
நான் பெற்ற அலைச்சல், வேற யாரும் படக்கூடாதுனு இந்தக் கலை சேவையை ஆரம்பிச்சு இருக்கேன். அதாவது சினிமாவுல நிஜமாவே ஜெயிக்கனும்னு துடிப்புள்ளவங்களுக்கு மட்டும் அட்ரஸ் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்காக அவங்ககிட்ட பத்து பைசாகூட நான் வாங்கமாட்டேன். நான் பிஆர்ஓ கிடையாதுங்க. இது என் கலைக்காக நான் செய்யுற கலைச்சேவை. இதுவரைக்கும் சினிமாவுல இருக்குற ஆயிரம் பேருக்கு மேல என்கிட்ட அட்ரஸ் இருக்கு. ஒரு தரம் விஜய்சேதுபதிகூட என்கிட்ட அட்ரஸ் கேட்டிருக்கார்.
சினிமாவுல வந்து ராத்திரியோட ராத்திரியா முன்னுக்கு வரணும்னு நினைக்குறது ரொம்ப தப்பு. நான் இங்க வந்து 9 வருஷம் ஆகுது. ஆனா, என்னிக்காச்சும் ஒரு நாள் ’சிறந்த நடிகன்’னு விருது வாங்குவேன்னு நம்பிக்கை இருக்கு. நான் இங்க இல்லைங்க… ஹாலிவுட்டுக்கு போனாலும் இந்த அட்ரஸ் கொடுக்குற சேவையை நிறுத்தவே மாட்டேன். இதுக்காகவே வெப்சைட் கிரியேட் பண்ணி அங்கயும் நிறைய பேருக்கு உதவிட்டு இருக்கேன்.
 
ஆனா பாருங்க, போன வாரம் ஒரு பக்கிப்பய என்கிட்ட வந்து, சன்னிலியோன் அட்ரஸ் கிடைக்குமா?னு கேட்டான். அதைத்தான் என்னால ஜீரணிக்கவே முடியலை. அப்டியே கையில கல்லை எடுத்து துரத்த ஆரம்பிச்சுட்டேன். எந்த காரணமா இருந்தாலும் நடிகைகளோட முழு விலாசத்தை கொடுக்கவே மாட்டேங்க’’
ஆறிய டீயை மடக்கென குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் அட்ரஸ் கார்த்தி.
 
-பொன்.விமலா
படங்கள்:தி.ஹரிஹரன்
Join The Conversation

Leave a Reply